மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடங்கிய டிராக்டர் பேரணி ஹரியானா வந்தடைய உள்ளதாகவும், அதில் பங்கேற்க விவசாயிகளுக்கு அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமாரி செல்ஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், "விவசாயத் துறை சீர்திருத்தத்திற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கின்றன. விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன. பஞ்சாபிலிருந்து எந்தவொரு எதிர்ப்பு ஊர்வலமும் ஹரியானா எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
நமது மாநில விவசாயிகளைப் பொருத்தவரை, கோவிட்-19 பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என கூறினார்.
ஹரியானா அமைச்சர் அனில் விஜினுடைய பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று ஊடகங்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், "ஹரியானாவில் என்ன காட்டாட்சி நடக்கிறதா ? நீங்கள் விரும்பும் எவரையும் நீங்கள் அங்கே தடுக்க !" என்று கேட்டார்.
ஹரியானாவில் உள்ள பெஹோவாவை வந்தடையும் இந்த பேரணி பின்னர் குருக்ஷேத்திரத்தை அடையும் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டராங்கள் தகவல் தெரிவித்துள்ளன.