இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், புனித தலத்திற்குச் சென்றிருந்த யாத்ரிகர்கள் உள்ளிட்ட பலரும் பிற மாநிலங்களில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
ஊரடங்கு காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரிகர்கள் சிலர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நந்தே என்ற புனிதத் தலத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க பஞ்சாப் அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
முன்னதாக இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் பேசினார். இருப்பினும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள பஞ்சாப் பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்ப மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள பெரும்பாலான பஞ்சாப் யாத்ரிகர்கள் விவசாயிகள். பஞ்சாபில் ஏப்ரல் 15ஆம் தேதி ரபி அறுவடைக் காலம் தொடங்கியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு மகாராஷ்டிராவிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நந்தேத் சாஹிபில் சிக்கியுள்ள அவர்கள் பேருந்து மூலம் பஞ்சாப் திரும்ப மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பஞ்சாப் திரும்பும் யாத்ரிகர்கள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்படி முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: சுங்க பத்திரம் இல்லாமல் மே 15ஆம் வரை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அனுமதி