ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது என்றும், மாநிலம் முழுவதும் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமரிந்தர் சிங் தெரிவித்தார். இதுபோன்று மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க, அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய முடியும் என தலைமைச் செயலர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வந்த தலைமைச் செயலர், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் இயற்கை பேரிடர்களைச் சமாளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு, இன்னும் பயிற்சிகள் போதாத நிலை உள்ளது. மேலும், இதில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, சிறந்த, விரைவான பதிலை உறுதிப்படுத்த பரிந்துரைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக வழங்கலாம் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
சங்கரூர் மாவட்டம் பகவான்பூரா கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை, சாக்குப்பையால் மூடப்படிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினரும், உள்ளுர் நிர்வாகிகளும் இணைந்து 109 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நேற்று குழந்தையை மீட்டனர். ஆனால், குழந்தை இரண்டு நாள்களுக்கு முன்பாகவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.