இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீனப் பொருள்களை நிராகரிக்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும், சீனப் பொருள்களை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள கோண்ட்வே-தவாடே கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் சீனப் பொருள்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது. இதுதொடர்பாக கிராமப் பஞ்சாயத்து அலுவலர்கள் சுற்றறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் நிதின் தவாடே, “சீனப் பொருள்கள் மீதான தடை குறித்து கிராமப் பஞ்சாயத்து ஒப்பந்தக்காரர்களுக்கும் தெரிவித்துள்ளோம். சீனப் பொருள்களின் விற்பனை, கொள்முதலைத் தடைசெய்யுமாறு இங்குள்ள மக்களுக்கும் கடைகளுக்கும் தெரிவிக்க உள்ளோம். இதற்கான பதாகைகள், சுவரொட்டிகளை ஒட்டவிருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி