புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான் குமாரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புவனேஷ்வரன் உள்பட ஒன்பது பேர் போட்டியிட்டனர். நேற்று (அக்.21) காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவுற்றது. இந்த இடைத்தேர்தலில் 69.44 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை எட்டு மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 12 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.