புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தற்போது மிக வேகமாக அதிகரித்துவரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து எல்லைகளையும் மூட மாநில முதலமைச்சர் நாராயணசாமி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவம், அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே புதுச்சேரி, காரைக்காலுக்குள் அனுமதிக்கப்படும் எனவும், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இ-பாஸ் கொண்டுவருபவர்களும் புதுச்சேரி மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, கனகசெட்டிக்குளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, வழுதாவூர் உள்ளிட்ட புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டன. மாநில எல்லைகளில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, கடும் சோதனை செய்யப்பட்டுவருகிறது.
குறிப்பாக மருத்துவத் தேவை, அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே, கடும் சோதனைக்குப் பிறகு, புதுச்சேரி மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டுவருகின்றன.