புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (ஆக.5) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இரு மகன்கள், மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அமைச்சர் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் அமைச்சர் ஒருவருக்கு முதன்முறையாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஆயிரத்து 24 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 5) பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் 182, காரைக்காலில் 21, ஏனாமில் 80, மாஹேவில் 3 என மொத்தம் 286 பேருக்கு ஒரே நாளில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் தீவிரமடையும் கரோனா