புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள பழமையான புகழ்பெற்ற நேரு மார்க்கெட் பழுதடைந்து போனதை அடுத்து, வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டது.
நேரு மார்க்கெட் அமைந்திருந்த இடத்திலிருந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் சுமார் 12 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று (அக்.16) மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மார்க்கெட் கட்டத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கென இடம் ஒதுக்கித் தரப்படவில்லை. இதனால் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் செய்தியாளர்களை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை விட்டு வெளியேறுமாறு காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, செய்தியாளர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, நேரு மார்க்கெட் வாயில் முன்பு அமர்ந்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த முதலமைச்சர் நாராயணசாமி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என செய்தியாளர்களிடம் கூறியதையடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ’ஊடக சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ - திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்