மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் விசிசி நாகராஜ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இதுகுறித்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னை நிதி நெருக்கடி என்றும், அரசுத் துறைகளிடம் அரசாங்கம் சரியாக வரி வசூல் செய்யாததே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
ஏழைகள் மின் பாக்கி 200 ரூபாய் வைத்தால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகள் மொத்தம் ரூ. 155 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும், பொதுப்பணித் துறை மட்டும் ரூ. 1 கோடி மின் பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மின்துறையே 35 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
"மின்கட்டண உயர்வு குறித்து மக்கள் குறைகேற்பு கூட்டத்தில் நாங்கள் விவாதிக்கையில், பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யவேண்டியுள்ளதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அவர்கள் கூறினார்கள்" என்றார்.
அதுமட்டுமின்றி, மின்துறைக்கு ரூ.155 கோடி நிதி நெருக்கடி இருக்கும்போது எதற்கு பொதுமக்கள் தலையில் சுமையை வைக்க வேண்டும்? அப்படி பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வரி எங்கே போகிறது? என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, அதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"155 கோடி ரூபாய் வைத்து பட்ஜெட் போடலாம்" என்று விமர்சித்த அவர், நுகர்வோர் மீது எல்லா வரியையும் சுமத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.