புதுச்சேரி துணை சபாநாயகர் எம் என் ஆர் பாலன் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தார். அப்போது தனது தொகுதியில் கரோனா நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை எனவும் அதனை சரி செய்யும்படி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த துணை சபாநாயகர் பாலன் கூறுகையில், “தனது தொகுதியில் ஒரு பகுதி தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பின்பு எதுவும் செய்யப்படாமல் உள்ளது.
அப்பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து அவர்களின் தேவைகளை அரசு பூர்த்தி செய்யவில்லை. இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பலமுறை முறையிட்டும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு எனது சொந்த நிதியைக் கொண்டு இதுவரை உதவி செய்து வருகிறேன்.
இதனை கூறுவதால் கட்சி, ஆட்சி மீது எனக்கு அதிருப்தி இல்லை. இந்த செயல்பாடுகளில் மட்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் புகார் தெரிவிப்பேன்” என்றார்.