புதுச்சேரியில், கடந்த மார்ச் 30ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, 2020ஆம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு புதுச்சேரி அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
அதற்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அரசியலமைப்பின்படி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சூழல் தற்போது எழுந்துள்ளது. இதன் காரணமாக, கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு முழு நிதிநிலை அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
அந்தத் தொகையில் சில திருத்தம் செய்யுமாறு மத்திய அரசு அந்தக் கோப்பை புதுச்சேரி அரசுக்கு திருப்பி அனுப்பியதாக அறிய முடிகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு, மத்திய அரசின் வேண்டுகோளின்படி திருத்தங்களை செய்து, அந்தக் கோப்புகளை மீண்டும் அனுப்பியும் பல்வேறு காரணங்களால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் தேதியை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று அமைச்சரவை கூடுவதாகவும், அக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.