புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 24) 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை உரையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிகழ்த்துகிறார். இந்நிலையில், புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது காவித்துணி போடப்பட்டு அவமதிக்கப்பட்டதை கண்டித்து, சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், ஆசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஆளுநர் வரும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர்கள் முழக்கமிட்டனர்.
உடனே அங்கு வந்த காவல்துறை தலைவர் ஸ்ரீ பாலாஜி வத்ஸவா, அதிமுகவினரை சமாதானம் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அவைக்கு திரும்பினர்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன், ”எம்ஜிஆர் சிலையை அவமரியாதை செய்தவர்களுக்கு அரசு துணை போனால் ஆட்சி நிலைக்காத சூழ்நிலை உருவாகும். சிலை மீது காவித்துணி போடுவது அநாகரிகமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மீது ஆதாரமற்ற அவதூறுகள் வெளியிட கூடாது - மணிப்பூர் நீதிமன்றம்