புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்க தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய அரசின் உத்தரவும், துணைநிலை ஆளுநரின் உத்தரவும் சட்டவிரோதமானது எனவே அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்தமனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு அமைச்சர் நமச்சிவாயத்தின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக்கூறி மனுவை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கடந்த 2015 மே மாதம் வரை காலியாகயிருந்த புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்து, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது.
ஆனால் துணைநிலை ஆளுநர், பாலகிருஷ்ணனை நியமிக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவை நியமித்து அப்பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டார். இதனைப் புதுச்சேரி அமைச்சரவை நிராகரித்தது. இதற்கிடையில் பாலகிருஷ்ணன், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் மாநிலத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மீறி பதவியேற்ற பாலகிருஷ்ணன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசுக் கல்லூரி முதல்வர் பதவி விலகல்...