புதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக.12) அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலியில், "கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதிகபட்சமாக ஒரே நாளில் 481 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகின்ற 14ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.
வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஐந்து நாட்களில் வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவ உபகரணங்களும் விரைவில் வாங்கப்பட உள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் 740 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு புதுச்சேரிக்கு கரோனா நிவாரண நிதியாக மூன்று கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு பிரதமர் தாராளமாக நிதி தருகிறார்" இவ்வாறு கூறியிருந்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்: முதலமைச்சர் நாராயணசாமி