புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாதத்திற்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
இதனிடையே, இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவை கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று 2019-20ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட் தொடர்பாக மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26ஆம் தேதி காலை தொடங்கும் என்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சரும், அம்மாநில நிதியமைச்சருமான நாராயணசாமி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.