தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் இன்று (நவ- 14) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் லாங்கேவாலாவில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று காலை ஜெய்சல்மரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு வந்தார்.
ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ராணுவ வீரர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அன்பையும், வாழ்த்துகளையும் உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பனிமலையோ பாலைவனமோ எங்கு ராணுவ வீரர்கள் இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி. உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இரு மடங்கு மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
இந்நிகழ்வில் பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்எம் நரவனே, எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், 2018ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டிலும், 2017ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும் மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். 2016ல் ஹிமாச்சல பிரதேச சீன எல்லையிலும், 2015ல் பஞ்சாபிலும்,2014ல் சியாச்சினிலும் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார்.
2014, மோடி பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே, தீபாவளி பண்டிகையின் போது வெவ்வேறு எல்லைப் பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்.