உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனை நிர்வகிக்க ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதன்படி, அறக்கட்டளைக் குழு பூமி பூஜையுடன் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டமிட்டது.
ஆகஸ்ட் 5ஆம் தேதியை பூமி பூஜை நடத்தும் நாளாக அறக்கட்டளைக்கு குழு இறுதிசெய்தது. அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பும் விடுத்தது. கர்நாடகாவைச் சேர்ந்த புரோகிதர் விஜயேந்திரா (75) என்பவர் பூமி பூஜை செய்வதற்கான நேரத்தை குறித்தார். அவர் குறித்த நேரத்திலேயே நாளை (ஆகஸ்ட் 5) மதியம் பூமி பூஜை நடைபெறவிருக்கிறது.
இச்சூழலில், அடையாளம் தெரியாத சில நபர்கள் போனில் தன்னை தொடர்புகொண்டு மிரட்டிவருவதாக விஜயேந்திரர் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, சாஸ்திரி நகரிலுள்ள அவரின் வீட்டு முன்பு காவலர்கள் சிலரை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளது.
தனக்கு வந்த போன் அழைப்பில், ஏன் பூமி பூஜைக்கு நேரம் குறித்தீர்கள் என்று ஒருவர் கேட்டதாகவும், அதற்கு அறக்கட்டளைக் குழுவினர் தன்னை அணுகியதால் நேரம் குறித்து கொடுத்ததாகவும் விஜயேந்திரா கூறியுள்ளார். இதேபோல பல எண்களில் தன்னை தொடர்புகொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டிவருவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீ ராம ஜென்மபூமி இயக்கம் ஒரு பார்வை!