பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய துணைத் தலைவராக அசோக் லாவாசா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது தேர்தல் ஆணையர் பதவியை அவர் நேற்று (ஆக. 18) ராஜினாமா செய்தார். இதனிடையே, தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகும் நோக்கில் அசோக் லாவாசா அளித்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இன்று (ஆக. 19) ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அவர் ஆகஸ்ட் 31ஆம் தேதி விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய துணைத் தலைவராக அசோக் லாவாசா செப்டம்பர் மாதம் பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ள திவாகர் குப்தாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதற்கிடையே, புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோரா, வருகிற 2021ஆம் ஆண்டு, மே மாதம் ஓய்வு பெறவுள்ளார். அவரைத் தொடர்ந்து அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அசோக் லாவாசா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது தேர்தல் ஆணையர் பதவியை லாவாசா ராஜினாமா செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் குற்றமற்றவர்கள் என தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் அடங்கிய குழு புகாரை மறுத்தது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த லாவாசா, குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா பதவி விலகல்!