இந்த உலகிலேயே கொடூரமான விலங்கு எது என்றால், சந்தேகமின்றி மனிதன் என்று சொல்லலாம். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், ஏன் மற்ற விலங்குகளையும் வதைப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன்தான். இதற்கு, மற்றொரு சாட்சியாக கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
காட்டு யானை ஒன்று கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள கிராமத்தில் புகுந்துள்ளது. ஊருக்குள் காட்டு யானையைப் பார்த்த கிராமவாசிகள் சிலர், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். மனிதர்களின் விஷமத்தனத்தை அறியாத அந்த யானை நம்பிக்கையுடன் அன்னாசிப் பழத்தை வாங்கிக்கொண்டது.
யானை அன்னாசி பழத்தை கடித்தபோது, அந்த வெடி வெடித்து அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயத்தின் கடும் வலி மற்றும் வேதனையுடன் கிராமத்திலேயே அது சுற்றித் திரிந்துள்ளது. ஆனால், அப்போதும்கூட தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை அது தாக்கவில்லை.
ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாத யானை, அருகிலிருக்கும் வெள்ளியாற்றில் இறங்கியுள்ளது. ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்ற அந்த யானை, பரிதாபமாக உயிரிழந்தது. அதை உடற்கூறாய்வு செய்ததில், அது கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மோகன் கிருஷ்ணன் என்ற வனத்துறை அலுவலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மே 27ஆம் தேதி நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து பதிவிட்டதன் மூலம், இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "யானை நீண்டநேரமாக ஆற்றில் நிற்பதை அறிந்து, இரண்டு கும்கி யானைகளுடன் (சுரேந்திரன், நீலகண்டன்) அங்கு சென்றோம்.
ஆற்றிலிருந்த யானையை மீட்க முயன்றோம். ஆனால் அது எங்களை அனுமதிக்கவில்லை. மே 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு அது இறந்தது. வெடி வெடித்தபோது அது நிச்சயம் அதன் வயிற்றிலிருந்த குட்டியை நினைத்துக் கலங்கியிருக்கும்.
உயிரிழந்த யானையை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் 'அவள் தனியாக இல்லை' என்றார். அப்போது மருத்துவரின் முகத்தில் தெரிந்த வேதனையை, அவர் அணிந்திருந்த முகக்கவசத்தைத் தாண்டி என்னால் உணர முடிந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து தான் வழக்குப்பதிவு செய்ய வனத்துறைக்கு அறிவுறுத்தியதாகவும், கர்ப்பிணி யானையைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஃபேல் போர் விமானங்கள் சரியான நேரத்தில் கிடைக்கும்: பிரான்ஸ்