புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “புதுச்சேரி மக்களுக்கு 2021ஆம் புத்தாண்டு மகிழ்ச்சியாகத் தொடங்கியுள்ளது. புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறையும் வருவாய்த் துறையும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தன. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் புதுச்சேரியில் கோலாகலமாகப் புத்தாண்டை கொண்டாடினர். மாநில அரசின் உறுதியான முடிவால் புதுச்சேரியில் புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா நோய்த் தொற்றுக்கு இடையில் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் இருந்த மக்கள் உற்சாகமாக இந்தப் புத்தாண்டை கொண்டாடியது என்னால் பார்க்க முடிந்தது. புத்தாண்டை அனுமதித்ததற்கு காரணம், புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்குத்தான்.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 2021ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு ஒரு அமைதியான ஆண்டாகவும், வளத்தைக் கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும்” என்றார்.
புதுச்சேரி மாநிலம் தொல்லைகள் இல்லாத மாநிலமாக அமைய வேண்டும் என்ற அவர், ஜனநாயகத்தை மோடியும் கடைப்பிடிப்பதில்லை கிரண்பேடியும் கடைப்பிடிப்பது இல்லை எனக் குற்றஞ்சாட்டினார்.