இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த 2 + 2 அமைச்சர்கள் உரையாடல் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து, பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் கூட்டாக சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மைக்கேல் பாம்பியோ, மார்க் டி எஸ்பர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் நடைபெறும் 2 + 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் நேற்று தனிவிமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க அமைச்சர்கள், இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.