288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கும் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஐந்து மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஐந்து மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 44.6 விழுக்காடு, ஹரியானாவில் 53.7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 44 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதிலும், சொற்பமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 11, குஜராத்தில் 6, பிகாரில் 5, கேரளாவில் 5, அஸ்ஸாம் மற்றும் பஞ்சாபில் தலா 4, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 2 என நாடு முழுவதும் உள்ள 17 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்துள்ளது.