நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களவைத் தேர்தலும், இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்களுக்கு இடப்படும் மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முக்கியமான அனைத்துப் பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது.
அதேபோல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்துவைக்கும் மையங்களும் தயார் செய்யப்பட்டுவருகின்றன.
இதன்படி தமிழ்நாடு அரசு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்க வடசென்னை தொகுதிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியையும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியையும், தென் சென்னை தொகுதிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தையும் நியமித்துள்ளது.
மேலும் வரும் மே 23ஆம் தேதி இதே மையங்களிலேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அறைகளும், மின் வசதிகளும் துரிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ராயபுரம், திரு.வி.க. நகர், திருவொற்றியூர், பெரம்பூர், ராதாகிருஷ்ணன் நகர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆகியவை அமைக்கப்படுவதற்கான பணிகளை இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கினர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்த மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு அந்த அறை மாவட்டத் தலைமை தேர்தல் அலுவலர் மூலம் சீல் வைக்கப்படும்.
.