நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் தொடர் போராடங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மௌலாஅலி பகுதியில் கடந்த டிசம்பர் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் கமில் செய்த்சின்ஸ்கி என்ற போலாந்து மாணவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு கமில் இந்தியாவை விட்டு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தில் ஒருவரிடம் கேட்டபோது, "மௌலாஅலி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கமில் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு வந்த செய்தித்தாள் ஒன்றுக்கு போட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி அவரது படத்துடன் அடுத்த நாள் அச்செய்தித்தாளில் வெளியானது. இதன் காரணமாகவே கமில் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்" எனக் கூறினார்.
இதுதொடர்பாக அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "மாணவர்களுக்கான விசா விதிகளை மீறியதால் இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கமிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் குறித்து செய்தித்தாளில் வெளியான செய்தியை வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவேட்டு அலுவலகத்துக்கு நபர்கள் சிலர் அனுப்பியுள்ளனர். அவர் அரசியல் சார்பற்றவர் என்றாலும், சிஏஏவுக்கு எதிராக அவர் போராட்டம் செய்து, புகைப்படம் எடுத்துக்கொண்டதே பிரச்னைக்கு காரணம்" என்றார்.
சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதாக விஸ்வ பாரதிய பல்கலைக்கழகத்தில் படித்துவந்த வங்க தேச மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொரோனா பீதி: ஆசியன் மாநாடு ஒத்திவைப்பு