மகாராஷ்டிரா மாநிலம் கல்பாதேவியில், இரு பெண்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். போக்குவரத்து காவலர் ஏக்நாத் பார்த்தே, இவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அவர்களிடம் அபராதம் செலுத்தும்படி போக்குவரத்துக் காவலர் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பெண், போக்குவரத்து காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை தடுத்து நிறுத்தாத அருகில் இருந்தவர்கள் தாக்குதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், போக்குவரத்துக் காவலர் தங்களை இழிவாக பேசிய காரணத்தால்தான் தாக்கினோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவலர், தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை லோக்மான்யா திலக் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். கைது செய்யப்பட்ட பெண்களின் பெயர் சாத்வீகா ராமாகாந்த் திவாரி, மோஹசின் கான் என்பது விசாரணையில் தெரியவந்தது. அரசு அலுவலரை தாக்கியது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவலர் கூறுகையில், பெண்களை இழிவாக பேசவில்லை எனவும் அவர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.