பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கின் விசாரணைக்கு முன்னிலையாகும்படி சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத் துறை இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. வங்கியில் 4,300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஜனவரி 11ஆம் தேதி முன்னிலையாகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 4ஆம் தேதி, முதல்முறையாக அமலாக்கத் துறை இயக்குநரக அலுவலகத்தில் முன்னிலையான வர்ஷா ராவத்திடம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி 11ஆம் தேதி முன்னிலையாகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமான பிரவீன் ராவத்திற்கு, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி 95 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி வழங்கியிருந்தது. கிட்டத்தட்ட 1.6 லட்சம் ரூபாயை தனது மனைவி மாதுரி ராவத்தின் வங்கிக் கணக்கிற்கு பிரவீன் ராவத் மாற்றியுள்ளார். மொத்த தொகையில், 55 லட்சம் ரூபாய் வர்ஷா ராவத்திற்கு வட்டியில்லா கடனாக இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2010ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயும், 2011ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாயும் மாதுரியின் வங்கிக் கணக்கிலிருந்து வர்ஷாவுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி தாதர் கிழக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வர்ஷாவிடம் அமலாக்கத் துறை விசாரணை செய்துவருகிறது.
ஹவுசிங் டெவலப்மென்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இயங்கிவரும் குருஷிஷ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராக பிரவீன் ராவத் உள்ளார். இந்த வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டவரான அவரை முன்னதாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.