ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 03ஆம் தேதி வழங்கியது.
கரோனா தடுப்பூசி விநியோகம்
![கரோனா தடுப்பூசி விநியோகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10195804_covid.jpg)
வரும் ஜனவரி 16ஆம் தேதிமுதல் நாட்டில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனத் தெரியவந்துள்ளது.
மூன்று கோடி முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குப் போடப்பட்டபின், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் போடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த ஒத்திகையின் மூலம் லட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், பலருக்குப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது எனக் கூறினார்.
மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை
இதனையடுத்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 11) காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
![மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10195804_pm.jpg)
முன்னதாக, உலகின் மிகப்பெரிய அளவிலான கரோனா தடுப்பூசி விநியோகம் இந்தியாவில் தொடங்கவுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பூசி ஒத்திகை?
![கரோனா தடுப்பூசி ஒத்திகை?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10195804_co.jpg)
கரோனா தடுப்பூசிக்கு அரசு எவ்வாறு திட்டமிடுகிறது, மக்களுக்குத் தடுப்பூசி எவ்வாறு வழங்கப்படும், தடுப்பூசியின்போது என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்வதற்காகத் தடுப்பூசி ஒத்திகைசெய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வலசை பறவைகளும் காரணம்' - மூத்த விஞ்ஞானி கருத்து