சட்டப்பேரவைத் தேர்தல்
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இரு மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியே நடக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி தொடர்கிறது. கடந்த முறையைப் போன்று இம்முறையும் இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்கின்றன.
நரேந்திர மோடி பரப்புரை
ஹரியானாவில் பாரதிய ஜனதாவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக உள்ளார். இரு மாநிலத்திலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாரதிய ஜனதா முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. அதன்படி, பாரதிய ஜனதாவின் நட்சத்திர பேச்சாளரான பிரதமர் நரேந்திர மோடி இரு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்கிறார்.
பொதுக்கூட்டம்
இரண்டு நாட்களில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 14ஆம் தேதி ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லபகர்க் பகுதியிலிருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
இதையடுத்து 15ஆம் தேதி தாத்ரி, தனேசர், ஹிசர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அவருடன் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
யோகி ஆதித்யநாத்
தாத்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் பபிதா போகத் வேட்பாளராகக் களம் காண்கிறார். இவர் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர். இதேபோல் உள் துறை அமைச்சரும் பாரதிய ஜனதா தலைவருமான அமித் ஷா, அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் ஹரியானாவில் தீவிர பரப்புரை மேற்கொள்கின்றனர்.
வாக்கு சேகரிப்பு
உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 9ஆம் தேதி ஹைதால், பிவானி, ரோதக் ஆகிய மாவட்டங்களில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.
11ஆம் தேதி குர்கான், சிர்ஸா ஆகிய பகுதியில் ஜே.பி. நட்டா பரப்புரை செய்கிறார். அதே தேதியில் மாநிலத்தின் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் ஹரியானாவில் பாரதிய ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
ஹரியானாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா தீவிரம் காட்டிவருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 75 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் இலக்கு.
இதற்காக பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் 48 பேர் ஹரியானாவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு 21ஆம் தேதி தேர்தல் நடந்து, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிக்கலாமே
சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பினார் ராகுல் காந்தி
டிக் டாக் பிரபலத்திற்கு சீட் - பாஜகவின் பலே ராஜதந்திரம்!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: பரப்புரையில் ஈடுபடும் தலைவர்களின பட்டியல் வெளியீடு..!