பாஜகவின் மிக முக்கியத் தலைவராக 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அருண் ஜெட்லி, நிதித்துறை அமைச்சராக இருந்தார். டிசம்பர் 28, 1952ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா , பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பிற பாஜக தலைவர்களும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நினைவுகூர்ந்தனர். பல ஆண்டுகளாக, பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும், கட்சியின் சார்பில் வெளிப்படும் சக்திவாய்ந்த குரலாக அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில், அருண் ஜெட்லி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அருண் ஜெட்லிக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் அவரது அன்பான ஆளுமை, புத்திசாலித்தனம், சட்டம் குறித்த அவரது அறிவுக்கூர்மை ஆகியவற்றை என்றும் நினைவில் கொள்வார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ,"சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான அருண் ஜெட்லியின் அறிவாற்றலுக்கு இணையாக சமகாலத்தில் சிலர் மட்டுமே உள்ளனர். அவர் அரசியலுக்கு ஆற்றிய பங்கு என்றென்றும் நினைவுகூரத்தக்கது. தேசத்திற்காக மனதார சேவை செய்தவ அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி" எனப் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொது வாழ்க்கைக்கு ஜெட்லி ஆற்றிய பங்கை நினைவுகூர விரும்புகிறேன். கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு நினைவுகூரத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார்.