உலகப்புகழ் பெற்ற டைம் இதழ், ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற 100 தலைவர்கள் என்ற பெயரில் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாக்கம் செலுத்திய 100 தலைவர்கள் என்ற பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, வரலாற்றுப் பேராசிரியர் ரவீந்திர குப்தா, இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி பில்கிஸ் பானோ பெயர் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த என்ஆர்சி, சிஏஏ சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தப்போது, டெல்லி ஷாகீன் பாக் பகுதியிலும் போராட்டம் தொடங்கியது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அந்த போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து கரோனா ஊரடங்கால் போராட்டம் நிறைவடைந்த மார்ச் 24ஆம் தேதிவரை முதுமையிலும் அந்த பாட்டி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டக்காரர்களுடன் சரிசமமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி பில்கிஸ் பானோவை அங்கிருந்தவர்கள் அனைவரும் "ஷாகீன் பாக் பாட்டி" என்று அன்பொழுக அழைத்து வந்தது அப்போது சமூகவலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
டைம் இதழ், 2020 ஆம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 தலைவர்கள் பட்டியலில் பில்கிஸ் பானோ பாட்டியின் பெயர் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அவரிடம்
பேசியபோது," இந்தப் போராட்டம் நமது உரிமைக்கானது. குறிப்பாக நமது குழந்தைகளுக்கானது. சிஏஏ சட்டம் திரும்பப் பெறும் வரை ஓயக்கூடாது.
நான் குர்ஆனை மட்டுமே படித்திருக்கிறேன். நான் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை.
இன்று நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் எனது மகன் தான். அவரை நான் பெற்றெடுக்கவில்லை என்றால் என்ன்? என் சகோதரி ஒருத்தி தானே அவரைப் பெற்றெடுத்தார். அவரது நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என தெரிவித்தார்.