உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் 24 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்குத் தற்போது பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "உத்தரப் பிரதேசம் அவுரியாவில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரங்கல் பதிவில், "உத்தரப் பிரதேசம் அவுரியா சாலை விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு