வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், புதன்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் இந்தப் புயலால் 77 பேர் உயிரிழந்தனர்.
ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியுடன் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்குப் பின் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநில முக்கிய அலுவலர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், ''மேற்கு வங்க மாநிலத்திற்கு இடைக்கால புயல் நிவாரண நிதியாக 1,000 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், அதீத பாதிப்படைந்த குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை விரிவாக ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பாக சிறப்புக் குழு அனுப்பப்படும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு மத்திய அரசு சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த நெருக்கடியான சூழலில் மக்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனிருக்கும்'' என்றார்.
இதையும் படிங்க: வட்டிக் குறைப்பு, இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் - ரிசர்வ் வங்கி