கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க உள்ளதாகவும் அதற்கான தேதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவி சிங் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் யாதவ் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "ராமர் கோயில், அரசியலமைப்பு பிரிவு 370 ஆகிய விவகாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் போன்று பாகிஸ்தான், சீனாவுக்கு எதிரான போர் தேதி குறித்தும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்" என்றார்.
கட்சியினரை ஊக்குவிக்கும் நோக்கில் இம்மாதிரியான கருத்துக்களை தெரிவித்திருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீனாவுக்கு எதிராக போர் தொடுக்காமலேயே இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்போம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.