கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று வரை கேரளாவில் 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திரையரங்குகளை மார்ச் 31ஆம் தேதி வரை, மூட கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், 'சபரிமலை கோயிலுக்கு வருவதைத் தவிருங்கள்' என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேவசம் போர்டின் தலைவர் வாசு செய்தியாளர்களிடம், "கல்வி நிலையங்கள் அனைத்தும் மார்ச் மாதம் முழுவதும் மூடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அறியாமல் கோயிலுக்கு வருபவர்களை திருப்பி அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை" என்றார்.
ஆனால், கோயில் நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு!