புதுச்சேரியில் இன்று முதல் 10 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்தல், எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல், சேகரித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு 2ஆம் தேதி (இன்று) முதல் தடைவிதிக்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக எட்டு வகையான பொருள்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடையாணையை அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சிப்பரப்பில் மாசு கட்டுப்பாட்டு கழகம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலர்கள் ஆகியோர் நடைமுறைப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், மக்களின் ஆரோக்கிய வாழ்வை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், இதற்காக 5000 ரூபாய் முதல் 1 லட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.