புதுச்சேரியின் புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தரமூர்த்தி. இவருக்கு இடது கை, இடது கால் இல்லை. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் பெற்றோர் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையில் இருக்கின்றனர்.
சகோதர, சகோதரிகளும் சுந்தரமூர்த்தியையே சார்ந்துள்ளனர். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த சுந்தரமூர்த்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருந்த மாகே பிராந்தியத்தின் வல்சராஜை சந்தித்தார். அப்போது புஸ்சி வீதியில் வல்சராஜ் வீடு மாடியில் இருந்தது.
சுந்தரமூர்த்தி தனது உடல்நிலை பற்றி கவலைப்படாமல் மாடியேறி சென்று வல்சராஜை சந்திப்பார். அவர் மாடி ஏறி வரக்கூடாது என கேட்டுக்கொண்டாலும் அதனை ஏற்கமாட்டார். அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் வல்சராஜை சந்தித்து தனக்கு ஒரு வேலை வாங்கித்தரும்படியும் சுந்தரமூர்த்தி கோரிக்கை வைத்தார்.
சுந்தரமூர்த்தியின் குடும்ப சூழ்நிலையை கருதி வல்சராஜ் அவருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தார். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி வல்சராஜ் மீது மிகுந்த மரியாதையையும், அன்பையும் பொழிந்தார். வல்சராஜ் தற்போது அமைச்சராக இல்லாவிட்டாலும் சுந்தரமூர்த்தி அடிக்கடி சென்று அவரை சந்திக்கிறார்.
சுந்தரமூர்த்தி எப்போது வல்சராஜை சந்திக்க சென்றாலும் இனிப்புடன்தான் செல்வார். வல்சராஜ் பிறந்தநாள், புத்தாண்டு, ஓணம், தீபாவளி, பொங்கல் என எந்தப் பண்டிகை நாளையும் சுந்தரமூர்த்தி தவறவிடமாட்டார். அன்றைய நாள்களில் வல்சராஜை சந்தித்து இனிப்பு வழங்கிவிட்டுத்தான் செல்வார்.
சுந்தரமூர்த்தியின் அன்பில் உருகியுள்ள முன்னாள் அமைச்சர் வல்சராஜ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மனதை வருடும் பின்னணி இசையுடன், ஊஞ்சலில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சுந்தரமூர்த்தியுடன் பேசுவதுபோல இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "நான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன். ஆனால் வேலை வாங்கிய பின் நம்மை மறந்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் சுந்தரமூர்த்தி அப்படியில்லை. எல்லா விழாக்களிலும் என்னை சந்தித்து இனிப்பு வழங்கி வருகிறார். அவரது அன்பால் நெகிழ்ந்து போகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் சுந்தரமூர்த்தி, "10 ஆண்டுக்கு முன்பு எனக்கு இவர்தான் வேலை வாங்கி கொடுத்தார். தற்போது நான் ரூ.32 ஆயிரம் சம்பளம் பெறுகிறேன். எனது குடும்பத்திற்கே தெய்வம் வல்சராஜ்தான்" என நன்றி தெரிவிக்கிறார்.
மேலும், 40 வயதை கடந்துவிட்டதால் திருமணத்திற்கு பெண்தான் கிடைக்கவில்லை என வல்சராஜிடம் சொல்ல, உன் நல்ல மனதிற்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அதனையும், தான் நடத்தி வைப்பேன் என்றும் வல்சராஜ் கூற கலகலப்பாக வீடியோ நிறைவடைகிறது.
முன்னாள் அமைச்சரின் இந்த வீடியோ தற்போது புதுச்சேரி முழுவதும் வைரலாக பரவி வருகிறது.