கரோனா பெருந்தொற்று என்னும் இருளை அகற்றும் வகையில் நாட்டு மக்கள் இன்று இரவு 9 மணிக்கு வீட்டிலிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நாடெங்கிலும் இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்களின் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினர். சென்னை புரசைவாக்கம் பகுதிகளில், “வீட்டில் பாதுகாப்பாக இருப்போம், கரோனாவை விரட்டுவோம்” என்ற கருப்பொருளை உணர்த்தும் வகையில் மக்கள் ஒளியேற்றினர். இதேபோல் நகரங்கள், கிராமங்களிலும் மக்கள் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இதர மத்திய அமைச்சர்களும் வீடுகளில் விளக்கேற்றினர்.
நடிகரும் அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் வீட்டில் 8.45க்கு மணிக்கெல்லாம் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. இதையடுத்து சரியாக ஒன்பது மணிக்கு அங்கு தீப ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டது. ரஜினிகாந்த் தனது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வீட்டு வாசலில் தோன்றினார்.
கையில் இருந்த மெழுகுவர்த்தியை சில நிமிடங்கள் தூக்கிப் பிடித்தப்படி அவர் நின்றார். சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மின்விளக்குகளை அணைத்து விட்டு தீப ஒளியேற்றி வழிபாடு நடத்தினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பலரும் வீடுகளில் விளக்கேற்றினர்.
தெலங்கானா முதலமைச்சர் கையில் மெழுகுவர்த்தியுடன் காட்சியளித்தார். இவர்கள் தவிர பாபா ராம் தேவ் உள்ளிட்ட பலரும் தீபம் ஏற்றினர். நாட்டின் பல இடங்களில் இந்தியா வடிவில் தீபம் ஏற்றப்பட்டது.
சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட கோவிட்19 பெருந்தொற்றுக்கு மின்னல் வேகத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென்அமெரிக்க நாடுகளை பதம் பார்த்தது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த மாதம் (மார்ச்) 22ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்களை (வீரர்கள்) கௌரவிக்கும் விதமாக மக்கள் கரவோசை எழுப்பினர்.
மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்களும் ஒலியெழுப்பினர். இதற்கிடையில் கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இது வருகிற 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை 9 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கரோனாவை எதிர்க்க ஏப்ரல் 5ஆம் தேதி (இன்றைய தினம்) இரவு 9 மணிக்கு வீட்டிலுள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள் அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.