கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370, 35ஏ மத்திய அரசால் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஃபரூக் அப்துல்லா மத்திய அரசால் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய பிடிபி கட்சித் தலைவர் நஜீர் அகமது லாவே கூறுகையில், ”நாடாளுமன்ற உறுப்பினர் ஃபருக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் வைத்தது சட்டத்திற்குப் புறம்பானது. அதுவும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைத்தது தவறான நடவடிக்கை. ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கேள்வி எழுப்பியுள்ளேன். ஃபரூக் அப்துல்லாவை அரசாங்கம் விடுவித்ததை நான் மனதார வரவேற்கிறேன். மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
ஃபரூக் விடுதலையானாலும், மற்றவர்கள் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கூடிய விரைவில் விடுவிக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் புரட்சி அங்கு தொடங்கும். இந்தச் செயல் ஒடுக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீரின் மக்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி இருப்பதால். இப்போது அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் இணையதளத் துண்டிப்பை இந்த அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இது மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஃப்ரூக் அப்துல்லாவைப் போல, மற்ற அரசியல் கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும்!