கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவோரைப் பிடித்து, காவல்துறையினர் கண்டித்துவருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட வாகனங்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவமனைகளிலும் பொதுமான அளவு ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால், மக்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைச் சரிசெய்வதற்காக காவல் துறையினர் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் காவல் துறையின் வாகனத்தில், 38 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் (டி.சி.பி) ஷரத் சின்ஹா கூறுகையில், " பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்களுக்கு டாக்ஸி, இ-ரிக்ஷா கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இச்சமயத்தில்தான் ஆம்புலன்ஸுக்கும் தட்டுப்பாடு நிலவிவருவதால், காவல் துறை வாகனத்தில் மக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மக்கள் காவல் துறையைத் தொடர்புகொண்ட சிறிது நேரத்திலே, வீட்டு வாசலுக்கு காவல் துறையின் வாகனம் சென்றுவிடும். இதுவரை 290 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் தான் மக்களுக்கு உடனடி உதவி கிடைப்பது சிரமமானது. ஆனால், காவல் துறையை தொடர்புகொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.
இதையும் படிங்க: முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?