கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில், தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. மேலும், வருகிற திங்கள்கிழமையன்று சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கர்நாடகாவில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று நடந்தது. அப்போது ஆட்சி கவிழ்ப்பு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ம.ஜ.த கட்சியின் மூத்த தலைவர் ஜி.டி. தேவகவுடா, பா.ஜ.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவுள்ளதாகவும், இதற்கு ஒரு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் எனினும் இந்த விவகாரத்தில் குமாரசாமி தான் இறுதி முடிவு எடுப்பார்' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், வியாழனன்று காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரமேஷ் எல் ஜர்கிஹோலி, மகேஷ் குமத்தள்ளி, சுயேட்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகிய மூவர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து மூன்று எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.