கிழக்கு லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டு நாட்டின் எல்லைப் பகுதிகளை விரிவுப்படுத்திக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதனிடையே, ஜூன் 5ஆம் தேதி லடாக்-பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இருநாட்டு வீரர்களும் காயமுற்றனர். இந்தப் பகுதிகளில் தொடர் பதற்றம் நிலவிவரும் நிலையில், இரு நாட்டுப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் அரசியலைத் தாண்டி கட்சிகள் செயல்பட வேண்டும் எனவும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர் அத்துமீறலை மேற்கொண்டுவருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது ராணுவ வீரர்களின் தார்மீகத்தை உயர்த்த அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களும் எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துவரும் நிலையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்த காரணத்தால், அது பலவீனமாக உணர்கிறது" என்றார்.
சீன விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், "பேரிடரால் மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இந்தச் சமயத்தில், காங்கிரஸ், பாஜக கட்சிகள் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டு கீழ்த்தரமான அரசியலைச் செய்துவருகின்றன. இது துரதிருஷ்டவசமானது. இது தேசிய நலனுக்கு எதிரானது" என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் கட்டடம் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு