பாமாயில், பாம் ஒலீன் இறக்குமதிக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் புதிய ஆயுதம். நாடுகளைப் பணியவைக்க வெளியுறவுக் கொள்கைளையும் வர்த்தகத்தையும் இந்தியா ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
மோடியின் இந்த நடவடிக்கை, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான தனது அறிக்கைகளுக்கு அதிக விலை தர வேண்டும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமதுக்கு உணர்த்தும் வகையில் உள்ளது. ஏனென்றால், இந்தோனேஷியாவுக்கு அடுத்ததாகப் பாமாயிலை உற்பத்தி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக மலேசியா உள்ளது.
இந்தியாவின் இந்த முடிவால், பல கோடி மதிப்புள்ள வர்த்தகத்தை மலேசிய இழக்கவுள்ளது. ஏனென்றால், இந்தியாவில் இறக்குமதியாகும் பெருவாரியான பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான்.
இந்தியாவின் இந்த முடிவால், இந்தோனேஷியா மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளராக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்தோனேஷியாவிலிருந்தே வந்தது. அந்தச் சூழ்நிலையில், இறக்குமதிகளுக்கான வரி குறைக்கப்பட்டதுதான், மலேசியாவுக்கு பேரூதவியாக அமைந்தது.
மலேசியாவைப் போல இல்லாமல், இந்தோனேஷியா இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு வெளிப்படையான கருத்தும் தெரிவிக்காமல், புத்திசாலித்தனமான அனுகுமுறையையே கடைப்பிடித்தது. இத்தனைக்கும், உலகின் மிகப்பெரிய இஸ்லாம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா ஆகும்.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் நோக்கம் தெளிவாகவே உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வது, தளர்வு என்பதிலிருந்து கட்டுப்பாடு (Free to Restricted) என்று மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை, எந்தவொரு குறிப்பிட்ட உரிமமும் இல்லாமல், மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாமோலினை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதித்துவருகிறது.
மோடிக்கு மலேசியா அதிபர் மீது கோபம் ஏன்?
94 வயதான மகாதீர் பின் முகமது மலேசிய பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களின் ஒருங்கிணைந்த குரலாக உருவெடுக்க முயன்றார்.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மோடி அரசு ரத்து செய்தவுடன் மலேசிய பிரதமர், "காஷ்மீரை அத்துமீறி ஆக்கிரமைத்துள்ளது இந்தியா" என்று விமர்சித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் மகாதீர் பின் முகமது கேள்வி எழுப்பினார். இவரின் கருத்துகளுக்கு மோடி அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அதற்கு வெளியுறவு அமைச்சகமும் கடும் கண்டனங்களை பதிவுசெய்தது.
அப்போதிருந்து மகாதீர் மீது நரேந்திர மோடிக்கு அதிருப்தி இருந்துள்ளது. பிரச்னையை பெரிதாக்கும் வகையில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் மலேசிய அரசு மறுத்துவிட்டது.
மகாதீருக்கு முன் மலேசிய பிரதமராக நஜீப் ரசாக் இருந்தபோது, மோடியின் கிழக்கு நாடுகளுக்கு அதிக சலுகை என்று பொருள்படும் 'Look East' கொள்கையால் மலேசியா ஏகப்பட்ட சலுகைகளைப் பெற்றது. ஆனால், 2018 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வென்று பக்காத்தான் ஹரப்பன் கூட்டணி ஆட்சி அமைத்தபோதுதான், விஷயங்கள் தவறாக நடக்கத் தொடங்கின.
மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையில் உறுதித்தன்மையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, 15 ஆண்டுகளுக்கு பின் பிரதமரான மகாதீர் உறுதிபூண்டார். இஸ்லாமியர்கள் உலகில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், பாகிஸ்தானுடன் இணக்கமாக இருந்தார், இது இந்தியாவை கோபப்படுத்தியது.
தனது நாட்டிலுள்ள பாமாயில் உற்பத்தியாளரின் பொருளாதார நலன்களைக் கருத்தில்கொண்டு மோடியின் அழுத்தங்களுக்கு மகாதீர் பணிவாரா? என்ற கேள்விதான் பலருக்கும் எழுகிறது. ஆனால் இதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இந்தியா முஸ்லீம்களுக்கு மலேயாசியாவின் ஆதரவு என்பது தார்மீகமான ஒன்றாக மகாதீர் கருதுகிறார். ஆனால் இதை இந்தோனேசியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை மலேசியா எவ்வாறு கையாலும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பேரழிவின் காரணமாகவும், தொழிலாளர் மீதான மனித உரிமை மீறல்களாலும் பாமாயில் வர்த்தகத்தை கட்டுப்படுத்த மகாதீருக்கு, ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் கடும் அழுத்தத்தைத் தருகின்றன.
மறுபுறம், மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்படுவதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மோடியின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதை பெருவாரியாகக் குறைத்துள்ளதால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் மகிழ்ச்சியில் இல்லை.
இதையும் படிங்க:பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம்!