குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டும். இதற்காக, பாகிஸ்தான் வான்வெளி மூலம் குடியரசுத் தலைவர் விமானம் செல்ல அனுமதி வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. பாகிஸ்தான் அரசின் நிராகரிப்புக்கு காஷ்மீர் விவகாரம்தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
புல்வாமா தாக்குதலக்கு பிறகு பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்திக்கொள்ள தடைவிதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இந்த தடை ஜூலை மாதம் தளர்த்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.