ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கும் இந்திய அரசியல் சாசனப்பிரிவு 370, 35ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்யும் தீர்மானமும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டிற்கான இந்தியத் தூதரை வெளியேற்றி இந்தியாவுடனான தூதரக, வணிக உறவை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், பாகிஸ்தான் வான் பரப்பின் மூன்று வழித்தடங்களில் இந்திய விமானங்கள் பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தொலை தூர விமானங்கள் 2-3 மணி நேரம் கூடுதலாக பயணிக்க நேரிடும் என ஏர் இந்திய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாலகோட் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் விமானங்கள் பறக்கக் கூடாது என்று அந்நாடு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.