பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் டி பிரம்மா, பால் செல்வதாஸ் ஆகிய இரண்டு சி.ஐ.எஸ்.எஃப். (மத்திய தொழிலக பாதுகாப்புப் படை) பணியாளர்கள் நேற்று காலை திடீரென மாயமானதால் பதற்றம் ஏற்பட்டது.
இருவரும் சாலை விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகப் பாகிஸ்தான் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பலத்த காயங்களுடன் தூதரகம் திரும்பியுள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்திய தூதரக அலுவலர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை, இந்திய தூதரக அலுவலர்கள் சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோதே பாகிஸ்தான் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அறிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், தூதரக அலுவலர்கள் தாக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறியிருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், காஷ்மீர் விவகாரத்திலிருந்து மக்களின் திசையை திருப்பும் முயற்சியே இது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் தாக்கப்பட்ட இந்திய தூதரக அலுவலர்கள் - இந்தியா கடும் கண்டனம்!