பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கப்பற்படை அலுவலர் குல்பூஷன் ஜாதவ் 2016ஆம் ஆண்டு அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து இந்தியா தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில், குல்பூஷன் ஜாதவை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இந்த விசாரணை நேற்று நடந்த நிலையில், '' பாகிஸ்தானில் சட்டம் பயிற்சி செய்ய உரிமம் பெற்று பாகிஸ்தான் நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராக அனுமதிக்கப்படுவர். இது சர்வதேச சட்ட நடைமுறை. இந்த நிலையில் எந்த மாற்றமும் இருக்க முடியாது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாஹித் ஹஃபீஸ் கூறுகையில், '' குல்பூஷன் ஜாதவை பிரதிநிதித்துவப்படுத்த இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞகரை நியமிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதனை பாகிஸ்தான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது” என்றார்.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குதல், குல்பூஷன் ஜாதவுக்கு நிபந்தனையற்ற மற்றும் தடையற்ற தூதரக அணுகலை வழங்குதல் மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக ஒரு இந்திய வழக்கறிஞரை நியமித்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் என எதுவும் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முழு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!