ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா பகுதியில் உள்ள பெண்கள் இக்காலக்கட்டத்திலும் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதற்குப் பதில் துணியைப் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் அப்பெண்களுக்காக மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் 'தேஜஸ்வினி' திட்டம். 2019ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தால் ஏழை எளிய பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் கிடைத்துவருகிறது. மேலும் சானிட்டரி நாப்கின் வாங்க முடியாத பெண்களுக்கு இலவசமாகவும் நாப்கின் வழங்கப்பட்டுவருகிறது.
இது குறித்து "தேஜஸ்வினி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ”கோடெர்மாவில் நிறுவப்பட்ட நாப்கின் வங்கியின் நோக்கம் துணி பயன்படுத்துபவர்களை மாற்றுவது மட்டுமல்லாமல், இளம்பெண்களிடம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே. அவர்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதை வெட்கமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்தத் தவறான பார்வையை மாற்றுவதே எங்களின் நோக்கம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மற்றொரு பெண், "இப்பகுதியில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நாப்கின் வங்கியில் நன்கொடை அளிப்பார்கள். அவர்கள் வழங்கியதை பணப் பற்றாக்குறை காரணமாக துணிகளைப் பயன்படுத்தும் இளம் பருவப் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஆரம்பத்தில் நாப்கின் வாங்க முடியாதவர்களுக்கு இலவசமாக வழங்கினால், சில மாதங்களுக்குப் பிறகு அவர்களே வாங்கத் தொடங்குவார்கள் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.