2004-2009 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெற அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரம் குடும்பத்தார் ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்தன. மேலும், தனது வீட்டில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் பயங்கரவாத இயக்கமான லஷ்கர் - இ - தொய்பாவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி குஜராத் காவல் துறையால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். மேலும், அந்த வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியும் கடந்த 2006ஆம் ஆண்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்த இரண்டு என்கவுன்ட்டர்களும் போலி என்கவுன்ட்டர்கள் என்றும், இதில் அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதனையடுத்து 2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். ஆனால், அமித் ஷாவின் கைதுக்கு பின்னால் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அழுத்தம் அதிகமாக இருந்தது என பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது எப்படி அமித் ஷா கைது செய்யப்பட்டாரோ; அதேபோல் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா பத்து வருடங்களுக்குப் பிறகு ப.சிதம்பரத்தை சிபிஐ மூலம் கைது செய்திருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இது அமித்ஷாவின் பழிக்குப் பழி வாங்கும் செயல் என அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர்.