உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கரோனா பரிசோதனைகளை அதிகரித்தால் தான் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவில் நோய் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நாள்தோறும் சராசரியாக 8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) ஒரே நாளில் 8 லட்சத்து ஆயிரத்து 147 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக இதுவரை மொத்தம் 3 கோடியே 52 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்டி பிசிஆர் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கரோனா வைரஸ் மாதிரி பரிசோதனை அரசு ஆய்வகங்கள் 977, தனியார் ஆய்வகங்கள் 517 என மொத்தம் 1,494 ஆய்வகங்கள் உள்ளன. வல்லுநர்கள் சோதனை திறனை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளனர். காரணம் இந்தியா தான் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடாகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 69 ஆயிரத்து 239 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்து 44 ஆயிரத்து 941ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 56 ஆயிரத்து 706ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு மீண்டும் மருந்து' - புதிய தடுப்பூசி சோதனையிலும் வெற்றி கண்ட ரஷ்யா!