நாட்டின் கரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடர்பான புள்ளவிவரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 4 ஆயிரத்து 101 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 596 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மொத்தம் ஆயிரத்து 105 கரோனா பரிசோதனை மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 317 தனியார் பரிசோதனை மையங்களும் அடக்கம்.
மேலும், இந்தியாவில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் பெருந்தொற்று பாதிப்பின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளை ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாதகவும், 19 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்தில் இந்தியா!